கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தாய்- மகன் உள்பட 3 பேர் பலி; கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்

கோபி அருகே கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தபோது கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் பலியாகினர்.

Update: 2022-03-13 21:12 GMT
கடத்தூர்
கோபி அருகே கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தபோது கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் பலியாகினர். 
மாணவர்
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவதேவி (வயது 40). இவர்களுடைய மகன் விஜய் கோவிந்தன் (16). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 
இதேபோல் மணிகண்டன் உறவினர் சம்பத்குமார். இவருடைய மகள் ஷாமிலி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். 
வாய்க்காலில் குளித்தனர்
திருப்பூரில் இருந்து சிவதேவி, அவருடைய தந்தை பரமசிவம், விஜய் கோவிந்தன், ஷாமிலி உள்பட 13 பேர் 2 கார்களில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரிக்கு சுற்றுலா வந்தனர். கோபியை அடுத்த கூடக்கரை அருகே வந்தபோது அந்த பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலை கார்களில் வந்தவர்கள் பார்த்து உள்ளனர். 
உடனே குளிப்பதற்காக கார்களை அவர்கள் நிறுத்தி உள்ளனர். பின்னர் அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அப்போது விஜய் கோவிந்தன் எதிர்பாராதவிதமாக வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். 
சாவு
இதனால் அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டதும் சிவதேவி, ஷாமிலி ஆகியோர் விஜய் கோவிந்தனை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களும் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டதுடன், தண்ணீரில் மூழ்கினர். இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய 3 பேரையும் தேடினர். இதைத்தொடர்ந்து அவர்கள் வாய்க்காலில் இறங்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் 3 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடல்களை பார்த்து அவர்களுடைய உறவினர்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தபோது கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்