திருச்சியில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு

திருச்சியில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-13 21:08 GMT
திருச்சி
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் பகுதியில் வழிவிடு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை கோவிலில் சாமி கும்பிடுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சென்றனர். அப்போது விநாயகர் சிலையின் தலைப்பகுதி உடைக்கப்பட்டு மாயமானது.
 இதுதொடர்பாக, திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் விநாயகர் சிலையின் தலைப்பகுதியை உடைத்து எடுத்துச் செல்லப்பட்டது. அந்த சிலையை அருகே உள்ள தாமரைக்குளத்தில் வீசிச் சென்றதும் தெரிய வந்தது.
மர்ம நபருக்கு வலைவீச்சு
 மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டபோது ஒரு மர்ம நபர் அந்த சிலையை கடப்பாரையால் உடைப்பது பதிவாகி இருந்தது. அந்த காட்சியின் அடிப்படையில் அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி துணை போலீஸ் கமிஷனர் முத்தரசு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டி சார்பில் நிதி வசூலிக்கப்பட்டு புதிதாக 2½ அடி உயரமுள்ள விநாயகர் சிலை வாங்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு அந்த சிலை நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்