சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. அப்போது யானை மீது பூத்தட்டு வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

Update: 2022-03-13 21:03 GMT
சமயபுரம்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம்மாறி சிவபதத்தில் மிகப்பெரிய சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.
பச்சைப்பட்டினி விரதம்
இக்கோவிலில் மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம்செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசிமாத கடைசி ஞாயிறு முதல், பங்குனிமாத கடைசிஞாயிறு வரை அம்மன் 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
பூச்சொரிதல் விழா
இத்தகைய சிறப்பு மிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு கொடிமரத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை மீது கோவில் குருக்கள் அமர்ந்து ஊர்வலமாக பூக்களை கொண்டு வந்தார். ஊர்வலம் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து கோவிலை காலை 6.50 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் பூத்தட்டுகளை பெற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு 7.10 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மேல் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மருதூர், மாகாளிகுடி, வீ.துறையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு சாற்றினர். விழாவையொட்டி, பல்வேறு அமைப்புகளின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக கொள்ளிடம் நெ.1 டோல்கேட்டில் இருந்து சமயபுரம் ஆட்டுச்சந்தை வரை 50 நகரும் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதியும், ஆட்டுச்சந்தை, சக்திநகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யப்பட்டிருந்தன.
பக்தர்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பூச்சொரிதல் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெறுவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 3 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களை ஒழுங்குபடுத்த பணியிலும், கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் திருச்சி போலீஸ் அதிகாரிகள் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் தலைமையில், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும்  திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமயபுரம் தீயணைப்பு நிலையம் சார்பில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு பஸ் வசதி
 பூச்சொரிதல் விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நேற்று காலையில் இருந்து இரவு வரை நடை சாத்தப்படாமல் அம்மனை கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 மேலும், அன்னதான திட்டத்தின்கீழ் 4 ஆயிரம் பேருக்கு சமையல் செய்யப்பட்டு வரும் நிலையில் பூச்சொரிதல் விழாவிற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் அவர்களுக்கு தேவையான அளவிற்கு உணவுகள் தயார் செய்து கோவில் பணியாளர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதான மண்டபத்தில் வழங்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பூச்சொரிதல் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடக்கிறது.
---

மேலும் செய்திகள்