சேலம் மாவட்ட அளவிலான சமையல் போட்டி: பாரம்பரிய உணவுகளை சமைத்து காட்சிப்படுத்திய சத்துணவு பணியாளர்கள்-சிறந்த தயாரிப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

சேலம் மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் பாரம்பரிய உணவுகளை சமைத்து சத்துணவு பணியாளர்கள் காட்சிப்படுத்தினர். சிறந்த தயாரிப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-03-13 20:54 GMT
சேலம்:
சேலம் மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் பாரம்பரிய உணவுகளை சமைத்து சத்துணவு பணியாளர்கள் காட்சிப்படுத்தினர். சிறந்த தயாரிப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சமையல் போட்டி
சேலத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவு துறை சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி கோட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த போட்டியில் எண்ணெய் இல்லாத சமையல், அடுப்பில்லா சமையல், நோய் தொற்றை எதிர்க்க உதவும் சிறுதானிய உணவு உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக சிறு தானிய உருண்டை, கொள்ளு உருண்டை, தேங்காய் பால் அல்வா, அரசாணிக்காய் லட்டு, ராகி உருண்டை, பேரீச்சை பழம் லட்டு, மிக்சர், அடை, ராகி மற்றும் கம்பு உருண்டை உள்ளிட்ட பலவகையான பழங்கள் மற்றும் சிறுதானியங்களால் ஆன உணவுகளை சத்துணவு பணியாளர்கள் தயாரித்து காட்சிப்படுத்தி இருந்தனர்.
பரிசு
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனைஜா மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் உணவுகளை சாப்பிட்டு பார்த்து சிறந்த உணவுகளை தயாரித்த சத்துணவு பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற சத்துணவு பணியாளர்கள் கூறுகையில், இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதால் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு உணவுகளை தயாரித்து அதை குழந்தைகளுக்கு வழங்க ஊக்கம் தருகிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க இதுபோன்ற சிறுதானிய பொருட்களால் செய்யப்படும் உணவுகளை வழங்கலாம். இதுபோன்ற சமையல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்