ஏற்காட்டில் உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-முதன்மை நீதிபதி குமரகுரு திறந்து வைத்தார்
ஏற்காட்டில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு திறந்து வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காட்டில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு திறந்து வைத்தார்.
நீதிமன்றம்
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் ஆண்டுக்கு சுமார் 500 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகள் அனைத்தும் சேலத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக ஏற்காடு பகுதி மக்கள் சேலம் சென்றுவர சிரமப்பட்டு வந்தனர்.
எனவே ஏற்காட்டில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு அனுமதியுடன் ஏற்காடு தாலுகா அலுவலக வளாகத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி
விழாவில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு கலந்து கொண்டு நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏற்காடு பகுதியில் 145 கிரிமினல் வழக்குகளும், 82 சிவில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் 572 நிலுவையில் உள்ளன. நாளை (அதாவது இன்று) முதல் இந்த நீதிமன்றம் செயல்படும். ஏற்காடு வட்டாரத்துக்கு உட்பட்ட வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும். சேலம் மாவட்ட 5-வது ஜூடிசியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள ஏற்காடு பகுதியில் உள்ள வழக்குகள், ஏற்காடு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் மேல்முறையீடு சேலம் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், அதாவது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு உட்பட்ட வழக்கு மட்டும் இங்கு விசாரிக்கப்படும். 3 ஆண்டு சிறை தண்டனைக்கு உட்பட்ட கிரிமினல் வழக்குகள் மட்டும் இந்த கோர்ட்டில் நடைபெறும். இதனுடைய மேல்முறையீடு சேலத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட நீதிபதி குமரகுரு பேசினார்.
முதல் நீதிபதி
ஏற்காடு உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற முதல் நீதித்துறை நடுவராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். விழாவில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோ, மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி பாண்டவன், குடும்ப நல சிறப்பு நீதிபதி பத்மா, தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கிறிஸ்டல் பபிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அய்யப்பமணி, அரசு வக்கீல் தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.