கடையில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயின.
துறையூர்
துறையூர் அருகே உள்ள சித்திரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(வயது 50). இவர், துறையூரில் உள்ள முசிறி ரவுண்டானா அருகில் புறவழிச்சாலையில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக கடையை திறந்தார். அப்போது கடையின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு, கடையின் உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன.
மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருந்தன. அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், துறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொபட் திருட்டு
இதேபோல, ராமகிருஷ்ணனின் பக்கத்து கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோபி என்பவரது மொபட்டும் திருட்டு போனது. இதுகுறித்து கோபி கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.