சங்ககிரியில் பரபரப்பு: பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; இசை கலைஞர் உள்பட 2 பேர் சாவு-35 பேர் படுகாயம்
சங்ககிரியில் தாறுமாறாக ஓடிய பஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் இசை கலைஞர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.;
சங்ககிரி:
சங்ககிரியில் தாறுமாறாக ஓடிய பஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் இசை கலைஞர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தாறுமாறாக ஓடிய பஸ்
சேலத்தில் இருந்து சங்ககிரி வழியாக ஈரோட்டுக்கு நேற்று மதியம் 1.30 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை, டிரைவர் வெற்றிவேல் (வயது 41) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ், சங்ககிரி அக்கமாபேட்டை பகுதியில் வந்த போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாலையின் இடதுபுறம் உள்ள சிறிய பாலம் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது.
இசை கலைஞர் பலி
இந்த பஸ்சில் பயணம் செய்த சங்ககிரி பழைய எடப்பாடி ரோட்டை சேர்ந்த கணேசன் (74) என்ற இசை கலைஞர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதவிர மல்லூரை சேர்ந்த சேதுபதி (27), தர்மபுரியை சேர்ந்த ராஜா (40), காக்காபாளையம் பழனிசாமி (45), கனகா (40), ஈரோடு சித்ரா (28), ராமலிங்கம் (54) உள்பட 35-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்னொருவரும் சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம், ஈரோடு, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயம் அடைந்தவர்களில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் விவரம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாறுமாறாக ஓடிய பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.