சிறுதானிய உற்பத்தியை முன்னிலைப்படுத்தும் திட்டம் அறிமுகம்
நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முன்னிலைப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று 5 மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
தஞ்சாவூர்:
நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முன்னிலைப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று 5 மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
கருத்து கேட்பு கூட்டம்
வேளாண்மை பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் அகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்று பேசினார்.
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் நடராஜன், வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகம். கடந்த ஆண்டு 48 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 54 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 6 லட்சம் ஏக்கர் பரப்பளவு அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரித்ததால், நெல்லை பாதுகாப்பதில் மிகப்பெரிய சவால் உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றான மாற்று பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை, விற்பனை செய்யும் இயக்கத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்று, தற்போது கலைஞர் வேளாண் மறுமலர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,997 கிராமங்களில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். வரும் 5 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியில் இக்கிராமங்கள் முழுமை பெறும். அப்போது தமிழகத்தில் பசுமை புரட்சி ஏற்படும்.
வேளாண்மை புரட்சி
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான விவசாயிகளிடம் ஏற்பட்டு வருகிறது. எனவே வரும் 3 ஆண்டுகளில் வேளாண்மை புரட்சி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். விவசாயிகளின் கருத்துகள் அனைத்தும் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்தாண்டு முதல்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றது. அப்போது கருவாக இருந்த வேளாண்மை நிதி நிலை அறிக்கை, தற்போது 6 மாத குழந்தையாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் 128 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுதானிய உற்பத்தி
தற்போது நமது மாநிலத்தில் அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்தியதால், மண் மலட்டுத்தன்மையாக மாறிவிட்டது. எனவே மண்ணை வளப்படுத்த தனியாக திட்டம் கொண்டு வரப்படஉள்ளது. இதற்கு இயற்கை விவசாயத்தையும், தேனீ வளர்ப்பையும் ஊக்குவிக்க உள்ளவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தின் முடிவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைப்போல கரும்பு மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முன்னிலைப்படுத்தும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
விவசாயிகள் கோரிக்கைகள்
இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவது குறித்தும் இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் இருக்கும். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இதுவரை விவசாயிகளை காணொலி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துகளை கேட்டுள்ளோம். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமை அடையும் விதமாக இந்த பட்ஜெட் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் காவிரி தனபாலன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் கோபிகணேசன், கோட்டூர் சத்யநாராயணன், திருவாரூர் மாசிலாமணி, மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இதில் ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். துரை.சந்திரசேகரன், நீலமேகம், அசோக்குமார், ஜவாஹிருல்லா, பூண்டி கலைவாணன், நாகை மாலி, கும்பகோணம் மேயர் சரவணன், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.