பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது
பெண் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே உடையனாம்பட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் ராக்கம்மாள் (வயது 52). இவரின் உறவினர் மகள் சோலைமணி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதமாக சோலைமணி, மூர்த்தியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தன் மனைவியின் பிரிவுக்கு காரணம் ராக்கம்மாள் தான் என நினைத்து நேற்று முன்தினம் வீடு புகுந்து ராக்கம்மாளை கத்தியால் சரமாரியாக குத்தியதில் ராக்கம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவான மூர்த்தியை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருச்சுழி-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த கொலை வழக்கில் மூர்த்தி (32) உள்பட 5 பேர் மீது திருச்சுழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையிலான போலீசார் மூர்த்தி, அவரது அண்ணன் வெற்றி செல்வன் (34) ஆகியோரை கைது செய்தனர்.