சைக்கிள்கள் நிறுத்த நிழற்கூடம் அமைக்கப்படுமா?
குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள்கள் நிறுத்த நிழற்கூடம் அமைக்கப்படுமா?
குடவாசல்:
குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு சைக்கிளில் வருகிறார்கள். அந்த சைக்கிள்கள் வெயிலில் நிறுத்தி வைக்கப்படுகிறது. கடுமையான வெயில் காலம் என்பதால் பள்ளி முடிந்து திரும்பும் போது பல சைக்கிள்களில் காற்று இல்லாமல் தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் போதுமான இடவசதி இருந்தும் மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்தும் வகையில் மேற்கூரை உள்ள கட்டிடம் எதுவும் இல்லை. இதுகுறித்து பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவிகள் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், சைக்கிள்களை பாதுகாக்க நிழற்கூடம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவிகள் எதிர்பார்க்கிறார்கள்.