மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
கூலி தொழிலாளி
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தவசி அந்தோணி (வயது 24). கூலி தொழிலாளி. பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (22), முருகன் (22).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு சென்று விட்டு, நேற்று அதிகாலையில் அங்கிருந்து தங்களது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டினார்.
பரிதாப சாவு
நெல்லையை அடுத்த பொன்னாக்குடி வெள்ளநீர் கால்வாய் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த தவசி அந்தோணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்த சுரேஷ், முருகன் ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
2 பேருக்கு தீவிர சிகிச்சை
இதுகுறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுரேஷ், முருகன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தவசி அந்தோணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.