வேர்க்கிளம்பி சந்திப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

வேர்க்கிளம்பி சந்திப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த சாலையால் விபத்து அபாயமும் அங்கு நிலவுகிறது.

Update: 2022-03-13 19:35 GMT
தக்கலை, 
வேர்க்கிளம்பி சந்திப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த சாலையால் விபத்து அபாயமும் அங்கு நிலவுகிறது.
துர்நாற்றம்
தக்கலை அருகே வேர்க்கிளம்பி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் சித்திரங்கோடு, அழகிய மண்டபம், சாமியார்மடம், திருவட்டார் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சாலைகள் இணைகின்றன. மேலும் கோதநல்லூர், வேர்க்கிளம்பி பேரூராட்சிகள், கண்ணனூர் ஊராட்சிகளின் எல்கையாகவும் இந்த பகுதி அமைந்து உள்ளது. 
நான்கு சாலைகளில் இருந்தும் கனரக வாகனங்கள், அரசு பஸ்கள் தொடர்ச்சியாக வருவதால், வேர்க்கிளம்பி சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இந்த நிலையில் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.
கோரிக்கை
அதாவது கோதநல்லூர், வேர்க் கிளம்பி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் ஓடை வழியாக வேர்க்கிளம்பி சந்திப்பில் உள்ள கண்ணனூர் ஊராட்சி பகுதி ஓடையில் சேருகிறது. இந்த நிலையில் சாலையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மறுபுறம் செல்லமுடியாமல் சாலையின் மேலே பீறிட்டு பாய்கிறது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது,  அதை சரி செய்வதற்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அதுவும் சரிவர மூடப்படவில்லை.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கழிவுநீர் துர்நாற்றத்தாலும், அதனால் ஏற்பட்ட பள்ளத்தாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே வேர்க்கிளம்பி  நான்கு முக்கு சந்திப்பில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை போக்கவும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்