சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் மீதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் போலீஸ் எல்லைக்குட்பட்ட வடக்குகோணம் மாதா தெருவை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவருடைய மகன் ஆண்டனி சுரேஷ் பிரபு (வயது 24). ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் புன்னை நகர் பகுதியை சேர்ந்த மிசல் (21), இருளப்பபுரம் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த ஸ்ரீசாந்த் (20) மற்றும் ஸ்ரீசாந்தின் தம்பி ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக ஆண்டனி சுரேஷ் நண்பர்கள் மூன்று பேரிடமிருந்து விலகி இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஆண்டனி சுரேஷ் வீட்டிற்கு மதுபோதையில் வந்த நண்பர்கள் 3 பேரும், அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் பீர் பாட்டிலால் ஆண்டனி சுரேஷின் தலையில் அடித்ததோடு கல்லால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆண்டனி சுரேஷ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் மிசல் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.