நிலத்தரகர் கொலையில் அண்ணன்-தம்பி கைது
நெல்லை அருகே நிலத்தகர் கொலையில் அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே நிலத்தரகர் கொலையில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தரகர் கொலை
நெல்லை அருகே பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 45). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் குளித்தபோது மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொலையான வைகுண்டம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், ஒரு கொலை முயற்சி வழக்கில் வைகுண்டம் கோர்ட்டில் சாட்சி கூறுவது தொடர்பாக அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. அதன் காரணமாக வைகுண்டம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜன் (67), அவருடைய மனைவி லீலா (58), இவருடைய தங்கை ஜாக்குலின் தேவதாஸ் (56), ராஜன் திரவியம் மகன் பாபு (38) ஆகிய 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான ஜாக்குலின் என்பவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணன்-தம்பி கைது
இந்த நிலையில் வைகுண்டம் கொலை வழக்கு தொடர்பாக, பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியில் பதுங்கி இருந்த பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த தேவதாஸ் மகன்களான பிலிப் (28), ஆண்டோ (27) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான ராஜன் மகன்கள் செல்வராஜ், பிரபாகரன் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.