மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர்,
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் பேசினார். கூட்டத்தில் தமிழக அரசின் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் உள்ள ஆய்வக நுட்புனர் நிலை-2 காலிப்பணியிடங்கள் அனைத்தையும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணிநியமனம் செய்திட வேண்டும். விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அனைத்து நிலை-2 (ஆய்வக நுட்புனர்) பணியிடங்களையும், புற ஆதாரமுறையில் இருந்து, காலமுறை ஊதிய பணியிடங்களாக அறிவித்து தேர்வாணையம் மூலமாக பணிநியமனம் செய்திட வேண்டும். 24 மணி நேர ஆய்வகங்கள் நடைமுறையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 30 உள்நோயாளிகளுக்கு ஒரு பணியிடம் என ஆய்வக நுட்புனர் நிலை-2, நிலை-1 பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுசெயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் பொதுசெயலாளர் சுகுமார், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.