மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நொய்யல்,
விவசாயி
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே அமராவதி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 62), விவசாயி. இவருடைய மனைவி சுசீலா (45). இவர்கள் 2 பேரும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலி மங்கலம் பிரிவு அருகே சாலையை கடந்தபோது பின்னால் அதிவேகமாக சேலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் கூரியர் லாரி பழனிச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
கணவர் பலி-மனைவிக்கு தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கணவன், மனைவி 2 பேரும் தார்ச்சாலையில் விழுந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுசீலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் வினோதினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக லாரியை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்த முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.