குளித்தலையில் குதிரை, மாட்டுவண்டி பந்தயம்
குளித்தலையில் குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
குளித்தலை,
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட மணத்தட்டை பகுதி மக்கள் சார்பில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடந்தது. இதில் தேன்சிட்டு எனப்படும் சிறிய மாடு, ஒற்றை மற்றும் இரட்டை மாடு, புதிய குதிரை, சிறிய குதிரை, பெரிய குதிரைகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டன. குளித்தலை- மணப்பாறை சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி மாடுகள் மற்றும் குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பந்தயத்தில் பங்கேற்றனர். அதுபோல் இதனை பார்ப்பதற்காக குளித்தலை- மணப்பாறை சாலையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு பந்தயத்தையும் காத்திருந்து கண்டுகளித்தனர்.