கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.;
கீரனூர்:
கார் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ராசு மகன் பிரதீஸ் (17). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். நேற்று முன்தினம் அருண்குமார், பிரதீசை அழைத்துக் கொண்டு திருச்சியில் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். கீரனூர் அருகே திருச்சி- புதுக்கோட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது நடுப்பட்டியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஓட்டி வந்த கார் அருண்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கல்லூரி மாணவர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பிரதீஸ் படுகாயமடைந்தார். அருண்குமார் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன், காரை ஓட்டி வந்த இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.