கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்-சி.என்.ஐ. கரூர் தொடக்க விழாவில் வலியுறுத்தல்

கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என சி.என்.ஐ. கரூர் தொடக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-03-13 18:34 GMT
கரூர், 
கரூர்- ஈரோடு மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இந்தியாவின் முதல் கட்டுமான துறை நெட்வொர்க்கான (சி.என்.ஐ.) கரூர் சேப்டர் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சி.என்.ஐ. நிறுவனர் உதயகுமார் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினர்களாக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் கொங்கு அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, அமராவதி குழுமம் சிவக்கண்ணன், மாடர்ன் ஆர்க்கிடெக் நல்லுசாமி, கரூர் வீவிங் அண்டு நிட்டிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி, ஆடிட்டர் வெங்கடாசலம், கே.ஆர்.வி. மெரிடியன் ஓட்டல் நிர்வாக தலைவர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவில் திருப்பூர், கரூர் சி.என்.ஐ. மண்டல இயக்குனர் வி.ஆர்.கே.ரமேஷ் கூறும்போது, தமிழ்நாட்டில் சி.என்.ஐ.-யின் 23-வது சேப்டர் கரூரில் தொடங்கப்பட்டுள்ளது. சி.என்.ஐ. கடந்த 2021-ம் ஆண்டு ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் புரிந்துள்ளது. இந்த ஆண்டு கரூர் சேப்டர் மூலமாகவே ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் புரிவோம். இது கரூரில் சி.என்.ஐ.-யின் முதலாவது சேப்டர். சி.என்.ஐ. கிரீன் சிட்டி, சி.என்.ஐ. கேலக்சி என்று கரூரில் மொத்தம் 3 சேப்டர்கள் தொடங்க உள்ளோம். இதில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு துறையையும் சேர்ந்த தலைசிறந்த கட்டுமான துறையின் நிபுணர்களை எங்கள் அங்கத்தில் வைத்துள்ளோம். இந்த ஆண்டு மட்டும் சி.என்.ஐ. தமிழகத்தில் 50 சேப்டர்களை தாண்டி ரூ.250 கோடிக்கு மேல் வர்த்தகம் புரியும். தற்போது ஒரே மாதத்தில் 30 சதவீதத்திற்கு மேலாக கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. எனவே தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைப்பதுடன், இந்த துறையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்விழாவில் சி.என்.ஐ. கரூர் சேப்டர் தலைமை நிர்வாக இயக்குனராக முத்துசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர், கரூர் மண்டல இயக்குனர் வி.ஆர்.கே.ரமேஷ், வணிக வள தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் சி.என்.ஐ. ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பில்டர்ஸ் செல்லமுத்து செய்திருந்தார்.

மேலும் செய்திகள்