ராமேசுவரத்தில் 4 ஆண்டுகளாக சிறுவர் பூங்கா பூட்டியே கிடக்கிறது
ராமேசுவரத்தில் 4 ஆண்டுகளாக சிறுவர் பூங்கா பூட்டியே கிடக்கிறது. அந்த பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் 4 ஆண்டுகளாக சிறுவர் பூங்கா பூட்டியே கிடக்கிறது. அந்த பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிறுவர் பூங்கா
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் பகுதிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக மத்திய அரசு அவ்வப்போது பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி வருகின்றது.
இதேபோல் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ராமேசுவரம் பகுதியில் பல இடங்களில் பல லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்காக்கள் கட்டப்பட்டன.
4 ஆண்டுகளாக மூடப்பட்ட பூங்கா
ராமேசுவரம் ஸ்ரீராம் நகர் செல்லும் ராமசாமி ராஜா நகர் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் நகராட்சியின் மூலம் பல லட்சம் மதிப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா ஒன்று கட்டப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட வசதியாக சறுக்குகள், ஊஞ்சல் உள்ளிட்ட பல விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பெரியவர்கள் நடந்து வாக்கிங் செல்ல வசதியாக அலங்கார கற்கள் பதித்து நடைபாதையும் அமைக்கப்பட்டிருந்து.. இந்த பூங்கா கட்டப்பட்டு 4 ஆண்டுகளை கடந்தும் இதுவரையிலும் இந்த பூங்கா திறப்பு விழா கூட நடைபெறவில்லை. இதனால் இந்த பூங்காவின் 2 கதவுகளும் மூடப்பட்ட நிலையில் கதவு மற்றும் பூட்டுகள் கூட துருப்பிடித்த நிலையிலும் பூங்காவினுள் பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் வாக்கிங் செல்லும் நடை பயிற்சி இடங்கள் முழுவதும் ஏராளமான செடிகள் அடர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.
திறக்க கோரிக்கை
தற்போது ராமேசுவரம் நகரசபை தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள நாசர்கான் தனது வீட்டின் அருகே மூடப்பட்டு கிடக்கும் இந்த பூங்காவின் உள்பகுதியில் வளர்ந்து நிற்கும் புதர் செடிகள் அனைத்தையும் அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு உடனடியாக சிறுவர் பூங்காவை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.