சாக்கு குடோனில் தீ விபத்து
திருக்கோவிலூர் அருகே சாக்கு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
திருக்கோயிலூர்,
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரை சேர்ந்தவர் காமராஜ். இவர் அதே பகுதியில் சாக்கு குடோன் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த சாக்கு குடோன் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் அந்த தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சிவக்குமார், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் 30 ஆயிரம் சாக்குகள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.