திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள் நடந்தன. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருக்கடையூர்:-
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள் நடந்தன. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக ஐதீகம். இறைவனின் வீர திருவிளையாடல்கள் நடந்த அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இங்கு அபிராமி அந்தாதி பாடப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.
இங்கு மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்ட ஆயுள் விருத்தி பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும். இதனால் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
ஆயுள் விருத்தி பூஜைகள்
60 வயது நிறைவடைந்த தம்பதியர்களுக்கான சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் மணி விழா (அறுபதாம் கல்யாணம்) இங்கு நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட மணிவிழா உள்ளிட்ட ஆயுள் விருத்தி பூஜைகள் நடைபெற்றன. சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், சன்னதி வீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததையொட்டி பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.