விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு

வேளாண்துறை சார்பில் விவசாயி களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தையும் தரும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-03-13 17:38 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தையும் தரும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெல் ரகங்கள்
தமிழக அரசு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும் நிலையான வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சத்துமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து புத்துயிரூட்டும் வகையில் புதிய அணுகுமுறைகளை வகுத்து நெல் ரகங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்து பாரம்பரிய ரகங்களை பாதுகாத்து வருகிறது.
​நவீன சாகுபடி முறைகளைப் பின்பற்றி உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற உத்திகளுடன் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி வேளாண்மையை ஒரு வணிகமாக, லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றமடைய செய்து நிலையான வளர்ச்சி அடைவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, ​கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம் இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்தல், பனைமேம்பாட்டு இயக்கம், சிறுதானிய இயக்கம், கூடுதலாக்கப்பட்ட நெல் கொள்முதல் விலை, கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகை, காய்கறி தோட்ட திட்டம், சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டம், மானிய மின்மோட்டார், பம்ப்செட்டுகள், உழவர் சந்தைகளை புதுப்பித்தல் மற்றும் புதிய உழவர் சந்தைகளை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. 
கண்காணிப்பு
உழவன் செயலி மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு திட்ட பயன்கள் நேரடியாக சென்றடைவதை அரசு கண்காணித்து வருகிறது.
ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் வளத்தினை தக்க வைத்து முழுமையான பண்ணை மேலாண்மையினை செயல் படுத்தும் திட்டமாகும். வேளாண்மையுடன் ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கால்நடை பராமரிப்பு, பழ மரங்கள் வளர்ப்பு, தீவன பயிர் சாகுபடி போன்ற தோட்டக்கலை செயல்பாடுகளை செயல்படுத்தி ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் வழங்குவதோடு, பண்ணை வள ஆதாரங்களை மறுசுழற்சி செய்யவும் உதவுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் மானாவாரி பகுதி மேம்பாடு ஆகிய இரு திட்டங்களின் மூலம் வேளாண்மைத் துறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர் வட்டாரங்களை சேர்ந்த 200 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேற்கண்ட தகவலை வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்