ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது

மயிலாடுதுறையில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-13 18:45 GMT
முருகன்
மயிலாடுதுறை:-

மயிலாடுதுறையில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். 

வாடகைக்கு வீடு

மயிலாடுதுறை ரெயிலடி மேல ஓத்தசரகு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி வெற்றிச்செல்வி (வயது36). இவரிடம் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாராபுரம் ரோடு காந்திநகரை சேர்ந்த முருகன் (37) என்பவர் தான் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிவதாகவும், பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறைக்கு வந்துள்ளதாகவும் கூறி வீடு வாடகைக்கு கேட்டுள்ளார். 
இதனையடுத்து வெற்றிச்செல்வி தனது வீட்டின் மேல்பகுதி வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். 

அமைச்சர்களிடம் செல்வாக்கு

வீட்டின் மாடியில் குடியிருந்த முருகன், விஜயகுமார், வெற்றிச்செல்வி ஆகியோரிடம் நன்கு பேசி பழகி வந்துள்ளார். அப்போது முருகன் தனக்கு அமைச்சர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், வெற்றிச்செல்விக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.8½ லட்சம் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வெற்றிச்செல்வி மற்றும் அவருடைய கணவர் விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து ரூ.8½ லட்சத்தை முருகனிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஆசிரியர் வேலை வாங்குவதற்காக அமைச்சரிடம் கடிதம் வாங்க வேண்டும் என்று கூறி விஜயகுமாரை அழைத்துக்கொண்டு முருகன் திருச்சி சென்றுள்ளார். 

தலைமறைவு

திருச்சி சென்றவுடன் அமைச்சரை பார்த்துவிட்டு வருகிறேன், அதுவரை காரிலேயே உட்கார்ந்து இருங்கள் என்று விஜயகுமாரிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் அங்கு தேடிப்பார்த்தபோது முருகன் அங்கிருந்து தலைமறைவானது தெரியவந்தது. 
இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெற்றிச்செல்வி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தலைமறைவான முருகனை வலைவீசி தேடி வந்தனர். 

பிடிபட்டார்

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு நரசிம்மபாரதி உள்ளிட்ட தனிப்படை போலீசார் உடுமலைப்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த முருகனை பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து நேற்று மயிலாடுதுறை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அவரை மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்