ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண்ணிடம் 6½ பவுன் நகை அபேஸ்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-13 17:34 GMT
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். 
மூதாட்டியின் நகை திருட்டு
கருங்கல் அருகே உள்ள எட்டணி புலிமார் தட்டுவிளையை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 50). ஜெயந்தியின் தாயார் கமலா பாய் (70) தற்போது தனது மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆஸ்பத்திரி வார்ட்டில் கமலா பாய் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வார்டில் ஒரு மர்ம நபர் புகுந்தார். அவர் தூங்கிக்கொண்டிருந்த கமலா பாயின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் நகையை திருடி விட்டு நைசாக தப்பி சென்றார்.  சிறிது நேரம் கடந்து கமலாபாய் கண்விழித்து பார்த்தபோது  கழுத்தில் கிடந்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இது குறித்து அவர் அழுதபடி, தனது மகள் ஜெயந்தியிடம் கூறினார். தொடர்ந்து ஜெயந்தி ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். 
மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்சியை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்