குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறி உள்ளார்.
மயிலாடுதுறை:-
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப் தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் (டி.என்.பி.எஸ்.சி.) 5,529 பதவியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். இதற்கான முதல் நிலை தேர்வு வருகிற மே மாதம் 21-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் இணையவழியாக தொடங்கி நடத்தப்பட உள்ளது. இதில் பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
பதிவு செய்யலாம்
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் கலந்து கொள்ள தங்களுடைய பெயர், செல்போன் எண், முகவரி, கல்வித்தகுதி போன்ற சுயவிவரங்களை மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 6383489199 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவோ, studycircledeomayil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவோ அளித்து, பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04364 299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.