ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வனச்சரகர் ஜெபஸ் தலைமையிலான வனத்துறையினர் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் யானை ஒன்று கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. அந்த வாகனத்தில் யானை கொண்டு செல்வதற்கான ஆவணங்களை பரிசோதித்தபோது யானைக்கான உரிமம் மட்டும் வைத்திருப்பதும் யானையை ஓரிடத்திலிருந்து வேறோரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு உரிய அனுமதி பெறாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. புதுக்கோட்டையில் நடைபெற்ற சுமங்கலி பூஜை திருவிழாவிற்காக இந்த யானையை பாகன் சூர்யா தூத்துக்குடியில் இருந்து கொண்டு சென்றதும் திருவிழா முடிந்து மீண்டும் தூத்துக்குடி கொண்டு செல்வதும் தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள யானையின் உரிமையாளர் ராமதாஸ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வந்ததும் ஆவணம் குறித்த விசாரணைக்கு பின் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.