புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விவசாயிகள் சிறப்பு பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசின் சிறப்பு பரிசை பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-03-13 16:47 GMT
தர்மபுரி:
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசின் சிறப்பு பரிசை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விவசாயிகளுக்கு பரிசு
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள், புதிய தொழில்நுட்பங்களை தாங்களே கண்டறிந்து பயன்படுத்தும் விவசாயிகள், விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு பரிசு வழங்க மாவட்ட அளவில் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த பரிசுக்கான விவசாயிகள் தேர்வு குழுவில் கலெக்டர் தலைவராகவும், வேளாண்மை இணை இயக்குனர், மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் மற்றும் முன்னோடி விவசாயிகள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இதேபோல் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உழவன் செயலி
இதில் விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்து பயன்படுத்துதல், புதிய விவசாய எந்திரங்களை கண்டறிந்து பயன்படுத்துதல், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தல், அங்கக சாகுபடி முறையில் அதிக அளவில் மகசூல் பெறுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்படும். 
எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வேளாண்மை இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்