ஆன்லைன் மோசடிகளை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கோவை மாநகரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே இதனை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தெரிவித்தார்.;
கோவை
கோவை மாநகரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே இதனை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
ஆன்லைன் மோசடி
கோவை மாநகரில் செல்போனில் பேசி மற்றவர்களை நம்ப வைத்து ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பண மோசடி, ஆசை வார்த்தை கூறி பணத்தை அபேஸ் செய்வது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று பணத்தை எடுப்பது போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
அதேபோல் செல்போன் டவர் அமைப்பது, கிரெடிட் கார்டு உச்சவரம்பை அதிகரிக்க செய்து தருவது, வேலை வாங்கி தருவது, ஆன்லைனில் பரிசுகள் விழுந்தது போன்ற ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றும் செயல்களும் அரங்கேறி வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் அதனை தடுப்பது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஆன்லைன் மோசடி தொடர்பாக புகார்களை பெறுவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
நேரடியாக மட்டுமின்றி ஆன்லைன் மூலமும் புகார்கள் பெறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே பொதுமக்கள் விழிப்பாக இருப்பதோடு, வங்கி கணக்கு எண், ரகசிய குறியீடு எண்ணை யாரிடமும் தெரிவிக்க கூடாது.
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உள்ளோம்.
பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தங்களது தாய் தந்தையரிடம் தெரிவித்து இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.