கவர்னர்களும், முதல்-அமைச்சர்களும் மக்களுக்கான இணைப்பு பாலமாக இருக்க வேண்டும்
கவர்னர்களும், முதல்-அமைச்சர்களும் மக்களுக்கான இணைப்பு பாலமாக இருக்க வேண்டும் என்று கோவையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;
கோவை
கவர்னர்களும், முதல்-அமைச்சர்களும் மக்களுக்கான இணைப்பு பாலமாக இருக்க வேண்டும் என்று கோவையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் சவுந்தரராஜனுடன் சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் விமானம் மூலம் கோவை வந்தார்.
அவரை மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் 180 கோடி தடுப்பூசி போட்டதால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் கட்டாய அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய வெற்றி. இதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் விமான சேவை
புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் புதுச்சேரி- ஐதராபாத், புதுச்சேரி-பெங்களூரு இடையே விமானம் இயக்கப்பட உள்ளது. அதில் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு நான் முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
புதுச்சேரி வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டோம். இதை நிறைவேற்றிய பிரதமருக்கும், விமான துறை மந்திரிக்கும் நன்றி.
புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சி அடைந்தால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், நாகை மக்களுக்கு உதவிகரமாக அமையும். வேளாங்கண்ணி, நாகூர், சிதம்பரம் போன்ற இடங்களுக்கு செல்ல உதவியாக இருக்கும்.
பெரிதுபடுத்தவில்லை
தெலுங்கானாவில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையில்லாமல் தொடங்கி இருக்கிறது. அதை மக்களுக்காக நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் அதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பெருந்தன்மையுடன் விட்டுவிட்டேன்.
கவர்னர்களும், முதல்-அமைச்சர்களும் இணைந்து மக்களுக்கான இணைப்பு பாலமாக இருக்க வேண்டும். அனைத்து கவர்னர்களும் மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பணியாற்றி வருகிறார்கள். ஒரே நாடு... ஒரே தேர்தல்... குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் ஒரு சாதாரண குடிமகள் அவ்வளவு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜனாதிபதி பதவிக்கு உங்களின் பெயர் பரிசீலிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க வில்லை. பின்னர் அவர் கார் மூலம் சிவானந்தா காலனியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றார்.