லாரிகள் மோதல் டிரைவர் பலி

வேப்பூரில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-13 16:26 GMT
வேப்பூர், 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிமாறன் (வயது 40). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை மானாமதுரையில் இருந்து கான்கிரீட் கலவை எந்திர வாகனத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடன் கான்கிரீட் கலவை எந்திர வாகன டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி யை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் அருண்பாண்டியன் (24) என்பவரும் வந்தார்.

பலி

காலை 10.30 மணியளவில் வேப்பூர் கூட்டுரோடு அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மணிமாறன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.  இதில் லாாியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். அருண்பாண்டியன் காயமின்றி உயிர் தப்பினார். 

போலீசார் விசாரணை

விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் லாரியின் முன்பகுதியை மெஷின் மூலம் அறுத்தெடுத்து மணிமாறனின் உடலை வெளியே எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
மேலும் விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்