சோலையாறு அணை நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது

வால்பாறையில் கடும் வறட்சி காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது.;

Update: 2022-03-13 16:22 GMT
வால்பாறை

வால்பாறையில் கடும் வறட்சி காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது.

கடும் வறட்சி

கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனால் சீசன் காலங்களில் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டும். இந்த நிலையில் தற்போது வால்பாறையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. 

பகல் நேர வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாக இருந்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த வால்பாறை பகுதியும் வறட்சியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக அனைத்து ஆறுகளும் வறண்டு விட்டது. எஸ்டேட் பகுதி, வனப்பகுதியில் உள்ள நீரோடைகளிலும் தண்ணீர் வற்றிப்போய் விட்டது. 

நீர்மட்டம் குறைந்தது

இதற்கிடையில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 240 நாட்களுக்கும் மேலாக 100 அடியை தாண்டிய நிலையில் இருந்து வந்தது. தற்போது நிலவும் வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்து விட்டது. இதுபோன்று மற்ற அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. 

இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது மட்டுமின்றி வனப்பகுதி, எஸ்டேட் பகுதி ஆகியவை பசுமையை இழந்து காணப்படுகின்றன. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. கோடை மழை பெய்தால் மட்டுமே வறட்சியில் இருந்து தப்பிக்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்