தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 8,422 வழக்குகளுக்கு தீர்வு

நாகை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 8,422 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-03-13 18:30 GMT
வெளிப்பாளையம்:-

நாகை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 8,422 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடந்தது. நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு நாகை மாவட்ட நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி, மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் நாகப்பன், சுரேஷ் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வழக்குகளுக்கு தீர்வு

நாகை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில எடுப்பு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 14 ஆயிரத்து 895 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 
இதில் 8 ஆயிரத்து 422 வழக்குகளில் ரூ.3 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.

வேதாரண்யம் 

வேதாரண்யம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 312 வழக்குகளுக்கு சமரசமாக தீர்வு காணப்பட்டது. இதில் நீதிபதி லிசி தலைமையில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் வக்கீல்கள் குமரவேல், வைரமணி ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அபராதமாக ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 300 விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்