கொடைக்கானல் வனப்பகுதியில் 5-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ 5-வது நாளாக பற்றி எரிகிறது.;

Update: 2022-03-13 15:47 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை, மச்சூர் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதில் 500 ஏக்கர் வனப்பகுதியில் இருந்த மூலிகை செடி, கொடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனால் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினருடன் இணைந்து தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுக்குள் ெகாண்டு வரப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மேல்மலை கிராமமான கூக்கால் மற்றும் அதனை ஓட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 
இதற்கிடையே நேற்று 5-வது நாளாக கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. வனப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் விடிய, விடிய தீ எரிந்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு படைவீரர்கள், வனத்துறை பணியாளர்கள் திணறி வருகின்றனர். காட்டுத்தீயால் பெருமாள்மலை, மச்சூர், கூக்கால், கொடைக்கானல் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இருப்பினும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் முழுவீச்சில் போராடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்