கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது
கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.
கூடலூர்
கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.
காட்டுத்தீ
கூடலூர் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் பசுமை இழந்து உள்ளதால் புற்கள் காய்ந்து காணப் படுகிறது. இதனால் பல இடங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள ஆமை குளம் என்ற வனப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. ஏற்கனவே புற்கள் காய்ந்து இருப்பதாலும், காற்று வேகமாக வீசியதாலும் அங்கு காட்டுத்தீ பரவியது.
இதனால் வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் செடிகளில் தீ பரவிக்கொண்டே சென்றது.
உயிரினங்கள் கருகின
இது குறித்து தகவல் அறிந்த நாடுகாணி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ மளமளவென பரவியதால் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பின்னர் பல கட்ட முயற்சிக்கு பின்னர் வனத்துறையினர் காட்டுத்தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 4 ஏக்கரில் உள்ள புல்வெளிகள் கருகி நாசமானது. அங்குள்ள பறவைகள், எலி, பாம்பு, முயல் உள்ளிட்ட சிறு உயிரினங்கள் கருகி உயிரிழந்தன.
விசாரணை
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிக்குள் தீ வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.