நீலகிரி கோட்டத்தில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை
நீலகிரி கோட்டத்தில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி கோட்டத்தில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. நடப்பு மாதம் உறைபனி தாக்கம் இல்லாமல், நீர்பனி தாக்கம் இருந்து வருகிறது.
மழை பெய்யவில்லை. தற்போது கோடை காலம் என்பதால் பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. உறைபனிக்கு பின்னர் வறட்சியான நிலை காணப்படுவதால் வனப்பகுதி களில் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்தும், கருகிய நிலையிலும் உள்ளது.
இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புல்வெளியில் தீ
இந்த நிலையில் ஊட்டி அருகே கேத்தி ரெயில் நிலையத்தை ஒட்டிய புல்வெளியில் தீ வைக்கப்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அதேபோல் ஊட்டி பட்பயர் பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்காக புல்வெளிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதனால் தீ மளமளவென பரவியது. எனவே வனப்பகுதியில் தீ பரவுவதை தடுக்க தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள்
வனப்பகுதியை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலததில் இதுபோன்று தீ வைக்கப் படுவதால், வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் நிலை நீடித்து வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
நீலகிரி கோட்ட வனப்பகுதியில் கவர்னர்சோலை, ஊட்டி வடக்கு, ஊட்டி தெற்கு, கட்டபெட்டு, கோத்தகிரி, தொட்டபெட்டா, குந்தா உள்பட 11 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் வனப்பகுதிக்குள் யாரும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. குறிப்பாக சிகரெட் பற்ற வைக்க தீக்குச்சியை கொளுத்தும்போது அதை வனப்பகுதியில் தூக்கி வீசக்கூடாது. அதுபோன்று சிகரெட் துண்டுகளை வனப்பகுதியில் போடக்கூடாது.
கடும் நடவடிக்கை
வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலை ஓரத்தில் எக்காரணத்தைக்கொண்டும் சமையல் செய்யக்கூடாது. அத்துடன் காட்டை ஒட்டிய பகுதியில் இருப்பவர்கள் குப்பைகளை தீ வைக்கக்கூடாது.
இது தொடர்பாக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பில் யாராவது வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியிலேயோ அல்லது வனப்பகுதியிலேயோ தீ வைப்பது கண்டுபிடித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.