கோவையில் வருகிற 28-ந் தேதி 10 இடங்களில் மறியல் போராட்டம்
வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தையொடடி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்களின் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.;
கோவை
வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தையொடடி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்களின் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
14 அம்ச கோரிக்கைகள்
இந்தியாவில் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் மற்றும் மின்சார சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 28, 29-ந் தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்களின் மண்டல மாநாடு நேற்று காலை கோவை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு எம்.எல்.எப். தொழிற்சங்க தலைவர் மு.தியாகராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
10 இடங்களில் போராட்டம்
வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்தை, வெற்றிபெற செய்யும் வகையில் அனைத்து தொழிலாளர்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க செய்வது. 28-ந் தேதி கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மையம் என்ற வகையில் 10 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடத்துவது.
29-ந் தேதி கோவை மத்திய தபால் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்துவது, வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள், மாவட்டம் முழுவதும் வேன் பிரசாரம் மேற்கொள்வது,
பொது வேலை நிறுத்தத்தை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வருகிற 22-ந் தேதி வடவள்ளியில் அனைத்து சங்கங்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. இந்த போராட்டத்திற்கு ஆதரவுகோரி அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள், தொழில் அமைப்புகளுக்கு ஆதரவு கடிதம் அனுப்ப வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.ஆறுமுகம் உள்படதொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.