பங்குனி உத்திர திருவிழா, வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
பங்குனி உத்திர திருவிழா, வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து வருகின்றனர். மேலும் முடி காணிக்கையும் செலுத்துகின்றனர்.
திருவிழாவையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் மாலையில் தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா, பிடாரி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
நேற்று வார விடுமுறை என்பதால் பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் கவுண்ட்டர்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் செல்லும் பாதைகள், கிரிவீதிகள் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதோடு பக்தர்கள் போல போலீசார் சாதாரண உடைகளில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.