கொடைக்கானலில் கோடைவிழா இந்த ஆண்டு நடைபெறும் அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி
கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடைவிழா நடைபெறும் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் மத்திய அரசின் சார்பில் கூட்டுறவு ஊழியர்கள் பயிற்சிக்கூடம் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு தொடர்பாக கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை கூட்டுறவுத்துறை அமைச்சா் இ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோடை விழா மலர்க்கண்காட்சி இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெறும். இதில் கலந்து கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைக்க கோரிக்கை விடுக்கப்படும். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கொடைக்கானலில் நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ள சிறைச்சாலையை திறப்பது குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொடைக்கானல் வனப்பகுதியில் பிடித்துள்ள தீயை அணைக்க ஹெலிகாப்டர் அனுப்புவது குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைந்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இனி எத்தனை தேர்தல் வந்தாலும் தமிழக மக்கள் முதல்- அமைச்சரின் பக்கமே உள்ளனர். நகை கடன் தள்ளுபடி பட்டியல் குறித்து ஆராய்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைகளை திரும்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் விசாகன் ஆர்.டி.ஓ. முருகேசன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகரசபை தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக கொடைக்கானல் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்துகொண்டார்.