போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி

தேனியில் போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

Update: 2022-03-13 14:41 GMT
தேனி: 

தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவைப் பேணும் பொருட்டு போலீஸ் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மினி மாரத்தான் போட்டி தேனியில் நேற்று நடந்தது. இந்த மாரத்தான் போட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தது. ஆண்களுக்கு 11 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார். 


ஆண்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தொடங்கி மதுரை சாலை சந்திப்பு, கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் வழியாக அன்னஞ்சி விலக்கு சென்று அங்கிருந்து அல்லிநகரம், தேனி கிழக்கு சந்தை வழியாக தேனி நாடார் சரஸ்வதி வித்யாலயா பெண்கள் மெட்ரிக் பள்ளியில் போட்டி நிறைவடைந்தது. பெண்களுக்கு அன்னஞ்சி விலக்கு வரை போட்டிகள் நடந்தது.


இதில் போலீஸ் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் சுமார் 300 பேரும், பெண்கள் பிரிவில் சுமார் 200 பேரும் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்