10 மாதங்களுக்கு பிறகு அறிவியல் பூங்கா திறப்பு

திருவண்ணாமலையில் உள்ள அறிவியல் பூங்கா 10 மாதங்களுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-03-13 13:48 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள அறிவியல் பூங்கா 10 மாதங்களுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அறிவியல் பூங்கா

திருவண்ணாமலை வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏரிக்கரையோரம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நலனுக்காக கடந்த 2020-ம் ஆண்டு ரூ.3 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது.

இயற்கை சூழலுடன் அமைக்கப்பட்ட பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு அம்சங்களும், அவர்கள் அடிப்படை அறிவியல் குறித்து தெரிந்து கொள்வதற்காக அறிவியல் விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் குழந்தைகளை கவரக்கூடிய வகையில் விலங்குகளின் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திருவண்ணாமலை நகர மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. 

தினமும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து காலை மற்றும் மாலை வேளைகளில் பொழுது போக்குகின்றனர். 

உடற்பயிற்சி செய்பவர்களும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் இங்கு ஏராளமானோர் வருகின்றனர். உடற்பயிற்சி செய்பவர்களுக்காக உடற்பயிற்சிக்கான உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில் கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரானா பரவல் அதிகரித்தபோது பரவலை தடுக்கும் வகையில் ஏப்ரல் மாதம் பூங்கா மூடப்பட்டது. 

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 10 மாதங்களுக்கு பிறகு அறிவியல் பூங்கா இன்று திறக்கப்பட்டது.

இங்கு காலையில் இளைஞர்கள் உடற்பயிற்சியும், முதியவர்கள் நடைபயிற்சியும் மேற்கொண்டனர்.

மாலையில் குடும்பம், குடும்பமாக வந்து பொழுது போக்கினர். பூங்கா திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்