நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும்

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-13 13:33 GMT
தேவதானப்பட்டி: 

தேவதானப்பட்டி பகுதியில் மேல்மங்கலம் ஜெயமங்கலம், அ.வாடிப்பட்டி குள்ளப்புரம் ஆகிய ஊர்களில் நேரடி நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கெங்குவார்பட்டியில் மஞ்சளாறு அணை மூலம் நேரடியாக 650 ஏக்கரும், மத்துவார்குளம் கண்மாய் மூலமாக 250 ஏக்கரும் நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. கடந்த ஆண்டு இங்கு நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆண்டும் நெல் கொள்முதல் மையம் மீண்டும் திறக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். 

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விளைந்த நெல்லை அறுவடை செய்யாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். நிலத்தில் அறுவடை செய்ய தாமதம் ஏற்பட்டால் நெல்லின் தரம் மற்றும் எடை குறைந்துவிடும். 

கடந்த ஆண்டு கொள்முதல் மையம் திறக்க தாமதம் ஏற்பட்டதால் மழை பெய்து மையத்தில் கொட்டப்பட்ட நெல் சேதமடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு அதிகம் நஷ்டம் ஏற்பட்டது. ஒவ்வொரு விவசாயிக்கும் 10 மூட்டைகள் வரை நெல் சேதம் அடைந்து வீணானது. எனவே கெங்குவார்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் மையம் விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்