போலி துப்பாக்கியை காட்டி ஊழியரை மிரட்டி செல்போன் பறித்து சென்றவர் கைது

போலி துப்பாக்கி மூலம் ஊழியரை மிரட்டி செல்போன் பறித்து சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-13 13:13 GMT
கோப்பு படம்
மும்பை, 
போலி துப்பாக்கி மூலம் ஊழியரை மிரட்டி செல்போன் பறித்து சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
செல்போன் கடை
மும்பை கார் பகுதியில் உள்ள செல்போன் கடையில் விற்பனையாளராக பிரதமேஷ் (வயது24) என்ற வாலிபர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ந்தேதி காலை 9.15 மணி அளவில் கடையில் இருந்த போது வாடிக்கையாளர் போல ஒருவர் உள்ளே வந்தார். தான் கடற்படை அதிகாரி எனவும், புதிய செல்போன்களை காண்பிக்கும்படி தெரிவித்தார். 
இதனை நம்பிய அவர் கடையில் இருந்த சில செல்போன்களை காண்பித்தார். அப்போது அந்த ஆசாமி தான் கொண்டு வந்த பைகளில் 5 செல்போன்களை எடுத்து வைத்து கொண்டு அங்கிருந்து சென்றார்.
ஆசாமி கைது
இதனை கண்ட பிரதமேஷ் அவரை பிடிக்க முயன்ற போது, ஆசாமி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவதாக மிரட்டி விட்டு தப்பி சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 
இதில் சலீம் சேக் என்பவர் தான் கடற்படை அதிகாரியாக நடித்து போலி துப்பாக்கியை வைத்து மிரட்டி கடையில் இருந்த செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 ஐபோன்கள், 8 செல்போன்கள் மற்றும் திருட்டு மோட்டார் சைக்கிள், போலி துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்