அறுவடைக்கு தயாராகும் சின்ன வெங்காயம்
அறுவடைக்கு தயாராகும் சின்ன வெங்காயம்
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது சின்ன வெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை பொருத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்கு பிறகு பிடுங்கி நடவு செய்தும விதை வெங்காயமாகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி கேரளாவிற்கு அதிகளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்
நிரந்தர வருமானம்
சின்ன வெங்காய சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது
குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயத்தை நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்தும், விலைஅதிகமான நேரங்களில் விற்பனை செய்ய முடிகிறது.
சின்ன வெங்காயம் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது. சின்னவெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.சின்ன வெங்காயம் சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.