உடுமலை தளி சாலையில் செங்குளம் கரைப்பகுதியில் உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2019 ம் ஆண்டு ஜூலை மாதம் 4 ந் தேதி நடந்தது. இதைத்தொர்ந்து கோவில் வளாகத்தின் நுழைவுப்பகுதியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 69 அடி உயரம் உள்ள 5 நிலை ராஜகோபுரம் மற்றும் ரேணுகாதேவி கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முன் வாசலில் இரண்டு புறமும் சுழலும் தூண்களும், அழகிய முன் மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரத்திற்கு முன்புறம் 26அடி உயரமுள்ள கருடக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. கோவிலில் ராஜகோபுரம் மற்றும் ரேணுகாதேவி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 11 ந் தேதி மாலை6மணிக்கு தொடங்கியது.
இதையடுத்து நேற்று காலை 6மணிக்கு ராஜகோபுரம் மற்றும் ரேணுகாதேவி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடந்தது. யாகசாலையில் பூஜை செய்த தீர்த்தத்தை, தீர்த்த குடங்களில் எடுத்து வந்து பட்டாச்சாரியார்கள் கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் எழுப்பி வழிபட்டனர். ரேணுகாதேவி கோவில் கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டிரோன் மூலம், அனைத்து பகுதிகளிலும் இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
அன்னதானம்
விழாவையொட்டி கோவில் அருகில் பிரம்மாண்டமான அளவில் அமைக்கப்பட்டிருந்த 7அன்னதானக்கூடங்களில் அன்னதானம் நடந்தது. சுமார் 60 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.