குடியாத்தம் அருகே கணவருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு அரசு கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தம் அருகே கணவருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு அரசு கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே கணவருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு அரசு கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி பேராசிரியை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ஷான்பாஷா வழக்கறிஞரான இவர் செய்யாறு நகர தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார். இவருக்கும் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த சதிப்பசமுத்திரம் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சாயிதாபேகம் (வயது 39) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சாயிதாபேகம் கடந்த சில வருடங்களாக குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிவந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
ஷான்பாஷா குடும்பத்துடன் குடியாத்தம்-காட்பாடி ரோட்டில் கோர்ட்டு எதிரே உள்ள ராஜகோபால் நகரில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் சாயிதாபேகம் ஜன்னலில் புடைவையால் தூக்குப்போட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு ஷான்பாஷா தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருக்கு மெசேஜ்
தற்கொலை செய்து கொள்ளும் முன் சாயிதாபேகம் தனது கணவருக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் மன்னித்துவிடுங்கள் எனவும், பிள்ளைகளையும், எனது பெற்றோரையும் நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.