மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. 15-ந் தேதி தேர்த்திருவிழாவும், 16-ந் தேதி 63 நாயன்மார்கள் திருவிழாவும், 18-ந் தேதி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன.

Update: 2022-03-13 10:52 GMT
இந்த திருவிழாவையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், ஒரு இணை கமிஷனர், 5 துணை கமிஷனர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர்.

தேர் திருவிழா கண்காணிப்பு பணியில் 4 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் புகுந்தால் கண்டுபிடிக்கும் வகையில் முக அடையாள செல்போன் செயலி மூலமாகவும் கண்காணிக்கப்படும்.

கோவிலை சுற்றி 68 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 14 போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. தேர் திருவிழா நடைபெறும் 15-ந் தேதி அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும் 16-ந் தேதி அன்று மதியம் 2 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பி.எஸ்.சிவசாமி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வரை ஒருவழி சாலையாக போக்குவரத்து அமல்படுத்தப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்