மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்; பிரேத பரிசோதனையில் அம்பலம்

மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-13 00:32 GMT
தூக்க மாத்திரை

சென்னை பிராட்வே புத்தி சாகிப் தெருவில் உள்ள வீட்டின் 2-வது மாடியில் வசித்து வருபவர் அப்துல் ரகுமான் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி யாஸ்மின் (27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்துல் ரகுமான், தனது மனைவி யாஸ்மின், தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்ததாக கூறி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து யாஸ்மின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

இந்தநிலையில் யாஸ்மினின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில் யாஸ்மின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் அப்துல்ரகுமானை அழைத்து விசாரணை செய்தனர்.

அதில் அப்துல்ரகுமான், தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரிந்தது.

இதுபற்றி போலீசாரிடம் அப்துல்ரகுமான் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நாடகமாடினேன்

எனது மனைவி யாஸ்மினுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த நான், எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நான் எவ்வளவு கண்டித்தும் கள்ளத்தொடர்பை யாஸ்மின் கைவிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நான், யாஸ்மினுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். இதனால் அவர் அயர்ந்து தூங்கினார். அப்போது எனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.. பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடினேன். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமானதால் நான் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து யாஸ்மினின் தாயாரான துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த பரிதா பானுவிடம் புகாரை பெற்ற போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இது தொடர்பாக அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்