திருவட்டார்:
திருவட்டாரில் ஓடைக்குள் கார் பாய்ந்தது.
திருவட்டாரில் உள்ள அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் நேற்று காலையில் தக்கலை-திருவட்டார் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். திருவட்டார் கிராம அலுவலகம் எதிரே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்துக்கு வழி விடுவதற்காக சாலையோரம் காரை அதிகாரி ஒதுக்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த ஓடைக்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் அரசு அதிகாரி காயமின்றி தப்பினார். கார் லேசாக சேதமடைந்தது. பின்னர், கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது.
பரளியாற்றின் குறுக்கே உள்ள பாலம் முதல் திருவட்டார் கிராம அலுவலகம் எதிர்புறம் வரை சாலை பள்ளமாகவே உள்ளதால் இந்த இடத்தில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் விபத்தில் சிக்கி உள்ளது. எனவே, இந்த பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க சாலையோரம் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.