தி.மு.க. அரசு தமிழ் மொழிக்கு தொண்டாற்றுகிறது - சபாநாயகர் அப்பாவு

திமுக அரசு தமிழ் மொழிக்கு தொண்டாற்றுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2022-03-12 23:49 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பொதிகை தமிழ் சங்கத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா, சாதனை மலர் வெளியீட்டு விழா, தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி சாதனை மலரை வெளியிட்டு, தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் இருக்கும் வரையிலும் தமிழும் இருக்கும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கருணாநிதி. அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது பல தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை உருவாக்கி தந்தார்.

தமிழ் மென்பொருட்களை உருவாக்கி, உலகம் முழுவதும் தமிழில் அனைவரும் கணினியில் இயக்குகிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் அவர்தான்.
தமிழ்நாட்டில் அரசு பணியில் யார் சேர்ந்தாலும் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார். இதற்காக அவருக்கு இந்த நேரத்தில் உங்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இந்த அரசு தாமிரபரணி பொருநை நாகரிகத்தை வெளிஉலகத்திற்கு எடுத்துச் செல்ல அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. தி.மு.க. அரசு தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்